ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே சர்க்கரைநோய். ரத்தம் உடல் முழுவதும் பயணித்து உடலின் மொத்த செயற்பாட்டையும் சீராக்குகிறது. இதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கவேண்டும். உடலுக்குத் தேவையான உணவை நாம் உட்கொள்ளும்போது அது சர்க்கரையாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இதுதான் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. ஆனால், ஆரோக்கியமற்ற அதீத உணவுமுறை, குறைந்த உடல் உழைப்பு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னையினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. கண்வலி, சிறுநீரகக் கோளாறு, இதயப் படபடப்பு காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் 50 சதவிகிதத்தினர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாதவர்களே. இது அதிர்ச்சி தரும் உண்மைதான். சர்க்கரைநோய் - இதயம், சிறுநீரகம், கண், கால், பல் என உடலின் உறுப்புகள் மொத்தத்தையும் பாதிக்கிறது. இந்த பாதிப்புகள் நம்மை நெருங்காமல் காக்க, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கவேண்டும். `டயட் கன்ட்ரோல், மருத்துவ பரிசோதனை, வாழ்க்கைமுறை மாற்றங்களே இந்த நோயைக் கட்டுப்படுத்தி உடல் நிலையை சீராக வைக்கும். அதற்கு முறையான தொடர் சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம்' என்று சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தி வாழும் வழியைச் செவ்வனே எடுத்துரைப்பது இந்த நூலின் சிறப்பாகும். சர்க்கரைநோயைக் குணப்படுத்தமுடியாது. ஒருமுறை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டால் அந்த அளவு குறையாது... ஆனால், அது மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கமுடியும். எப்படி? டாக்டர் க.பரணீதரன் கொடுத்திருக்கும் ஆலோசனைகள் சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரிதும் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை. டாக்டர் விகடனில் வெளியான `ஸ்வீட் எஸ்கேப்' இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைத்து நலமோடு வாழ வாழ்த்துகள்!